5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மோடி ராஜதந்திரம்!| Dinamalar


பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காகவே மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் ராஜதந்திர அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டில்லி எல்லையில் கடந்த ஓராண்டாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு சபை நடவடிக்கைகளை முடக்கின. வரும் 29ல் கூடவுள்ள பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலும் இந்த பிரச்னையை முன்வைத்து பெரும் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அதில், விவசாயிகள் போராட்டம் மிகப் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, மணிப்பூர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:விவசாயிகள் போராட்டத்தை சாதாரணமாக நினைக்க வேண்டாம். சீக்கியர்கள் மற்றும் ஜாட் சமூக மக்களை வெல்ல முடியாது. படைகளை வைத்து அவர்களை அடக்க முடியாது.

மிகப் பெரிய பாதிப்பு

அவர்களது கோரிக்கையை ஏற்காமல் வெறுங்கையுடன் மட்டும் அனுப்பி விடாதீர்கள். பல நுாறாண்டுகள் ஆனாலும் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வின் தேர்தல் வெற்றியில் இந்த போராட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் பிறந்த நாளான நேற்று, மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பின் மிகப் பெரிய ராஜதந்திரம் இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். விவசாயிகள் போராட்டம் துவங்கி, வரும் 26ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் மகா பஞ்சாயத்துகள் நடத்த விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
மேலும் 29 முதல் அடுத்த மாதம் 23 வரை நடைபெறவுள்ள பார்லி., குளிர்கால கூட்டத் தொடரின் போது, பார்லி., நோக்கி தினமும் டிராக்டர் பேரணி நடத்தவும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டன.இந்த போராட்டங்கள், 2011ல் அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தை போல நாடு தழுவிய கவனத்தை பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

பெருத்த ஏமாற்றம்

அதை ஊதி பெரிதாக்கி ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய ஆதாயத்தை அடைய எதிர்கட்சிகள் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.பிரதமரின் அதிரடி அறிவிப்பு வாயிலாக எதிர்கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆனாலும் தாங்கள் கொடுத்த நெருக்கடியினால் தான் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதாக, காங்., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடி அரசு இந்த அறிவிப்பை நேற்று வெளியிடாமல் இருந்திருந்தால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரும் என்றே கூறப்படுகிறது.மேற்கு உ.பி.,யில் பாதிப்பு அதிகமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017 சட்டசபை தேர்தலில் உ.பி.,யில் மொத்தமுள்ள 403 இடங்களில் 320 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.

சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில், வரும் உ.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு 239 முதல் 245 இடங்களே கிடைக்கும் என்றும், விவசாயிகள் போராட்டத்தால் மேற்கு உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
பிரதமர் மோடியின் நேற்றைய அறிவிப்பு வாயிலாக, மேற்கு உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு ஏற்பட இருந்த இழப்பு பெரும் அளவில் சரிசெய்யப்பட்டு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

கூட்டணிக்கு வாய்ப்பு

பஞ்சாபை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்.,கில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்., என்ற புதிய கட்சியை துவங்கி உள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்படி அவரும் பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.தற்போது சட்டங்கள் வாபஸ் பெறப்பட இருப்பதை அடுத்து, பா.ஜ.,வுடன் அமரீந்தர் சிங்கின் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.அமீர்ந்தர் சிங் உடனான கூட்டணி பஞ்சாபில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு உருவாக்கி தர வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் மோடியின் இந்த ராஜதந்திரத்தால் ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ., மிகப் பெரிய வெற்றியை அறுவடை செய்ய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவு!

வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்கிறேன். இது, அவரின் தலைமைப் பண்பை காட்டுகிறது. பிரதமர், தன் உரையில் தெரிவித்ததைப் போல், விவசாயிகளுக்கு மத்திய அரசின் ஆதரவு என்றும் இருக்கும்.அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

உண்மைக்கு கிடைத்த வெற்றி!

இது, நாட்டில் உள்ள 62 கோடி விவசாயிகளுக்கும் கிடைத்துள்ள வெற்றி; உண்மைக்கு கிடைத்துள்ள வெற்றி. இனி பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, ஆணவத்தை விடுத்து, விவசாயிகள் நலனுக்காக பணியாற்றும் என நம்புகிறேன்.சோனியா, தலைவர், காங்.,

ஆணவம் அடிபணிந்தது!

மக்களுக்கு உணவு வழங்கும் விவசாயிகள், சத்தியாகிரக போராட்டத்தின் வாயிலாக ஆணவத்தை அடிபணிய வைத்து விட்டனர். அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துகள்.ராகுல், லோக்சபா எம்.பி., – காங்.,

உணர துவங்கிய அரசு!

வரவிருக்கும் தேர்தல்களில் தோல்வி அடைய இருப்பதை மத்திய பா.ஜ., அரசு உணரத் துவங்கி விட்டது. அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன்களுக்கு எதிராக செயல்படும் எந்த அரசாலும், இங்கு ஆட்சிபுரிய முடியாது. பிரியங்கா, பொதுச் செயலர், காங்.,

விளக்க தவறிவிட்டோம்!

பிரதமர் வெளியிட்ட அறிவிப்பை, உ.பி., அரசு சார்பாக வரவேற்கிறேன். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பல முறை பேச்சு நடத்தினோம். எனினும் எங்களிடம் இருந்த சில குறைபாடுகள் காரணமாக, அவர்களிடம் முறையாக விளக்க தவறிவிட்டோம்.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,

தலை வணங்குகிறேன்!

பஞ்சாப் விவசாயிகளால் துவங்கப்பட்டு அமைதியான முறையில் நடந்த போராட்டத்தின் பயனாகவே, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளுக்கு தலை வணங்குகிறேன்.சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் முதல்வர், காங்.,

விவசாயிகளுக்கு வாழ்த்து!

பா.ஜ.,வினரின் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் தொடர்ந்து போராடி வந்த ஒவ்வொரு விவசாயிக்கும் என் வாழ்த்துகள். இது விவசாயிகளின் வெற்றி. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

உறுதியான -போராட்டம்

நிகரற்ற உறுதியுடன் போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் இதர அமைப்பினருக்கும் தலை வணங்குகிறேன்.பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

சாதித்த விவசாயிகள்!

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக எடுக்கப்பட்டுள்ள முடிவை முழுமனதுடன் வரவேற்கிறேன். உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு, காந்திய வழியில் இதை சாதித்துக்காட்டிய விவசாயிகளுக்கு தலை வணங்குகிறேன்.ஸ்டாலின், தமிழக முதல்வர், தி.மு.க.,

பிரதமருக்கு நன்றி!

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்ததற்காகவும், பிரதமருக்கு நன்றி.
பழனிசாமி, தமிழக எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., – நமது சிறப்பு நிருபர் –

Source link


Leave a Reply

Your email address will not be published.