உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு: பிரதமருக்கு வருண் கடிதம்| Dinamalar


புதுடில்லி: ‛‛வேளாண் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்,” என, பா.ஜ., எம்.பி., வருண் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ., எம்.பி., வருண், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒராண்டாக விவசாயிகள் போராடி வந்தனர். 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் நடந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த முடிவை முன்னரே அறிவித்திருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. விவசாயிகள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும்போது, அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும். அவர்களை துன்புறுத்துவதற்காக அரசியல் ரீதியில் போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் இரண்டாவது கோரிக்கை. நமது நாட்டில் 85 சதவீதம் பேர் குறு மற்றும் சிறு விவசாயிகள். அவர்களின் நலனை காக்க, அவர்கள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இது நடக்காமல் அவர்களின் கோரிக்கை முழுமை பெறாது. மேலும் அவர்களின் கோபம் அதிகரிக்கவே செய்யும். எனவே, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் நலன் கருதி இந்த கோரிக்கையை உடனே ஏற்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இது விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பாதுகாப்பு அளிப்பதுடன், அவர்களை மோசமான சூழ்நிலையில் இருந்து முன்னேற வைக்கும்.

போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக உணர்ச்சிகளை தூண்டி விடும் வகையில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் பேசி வருகின்றனர். இதுபோன்ற பேச்சுகளால், லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்.3 ல் 5 விவசாயிகள் உயிரிழக்க நேரிட்டது. இந்த சம்பவம், நமது ஜனநாயகத்தில் விழுந்த கரும்புள்ளியாகும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நேர்மையான விசாரணை நடக்கும்.

latest tamil news

தங்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுவீர்கள் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவற்றை நிறைவேற்ற முன் வந்தால், நாட்டு மக்கள் மத்தியில் உங்களது மரியாதை மேலும் உயரும். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் வருண் தெரிவித்துள்ளார்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.