அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு விரக்தியில் உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர சட்டசபையில் நேற்று ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சந்திரபாபு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களை சந்தித்த போது கூறுகையில், சட்டசபையில், என் மனைவி புவனேஸ்வரி மீது கடுமையான மற்றும் இழிவான வார்த்தைகளை ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்தினர். இது, என் அமைதியை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. அவர்களின் தாக்குதலுக்கு பதில் அளிக்க வாய்ப்பு தரும்படி கேட்டேன். ஆனால், வாய்ப்பை மறுத்த சபாநாயகர், என் ‘மைக்’ கை அணைத்து விட்டார். எனவே சட்டசபை நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்க போவதில்லை என முடிவு செய்துள்ளேன். மீண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், முதல்வராக மட்டுமே சட்டசபைக்குள் வருவது என தீர்மானித்து உள்ளேன் எனக்கூறி சந்திரபாபு கண்ணீர் சிந்தினார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் கூறியதாவது: சந்திரபாபுவை மக்கள் நிராகரித்து விட்டனர். அவரது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அவரது கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. சட்ட மேலவையிலும் அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. தான் என்ன செய்கிறோம்; எப்படி நடக்கிறோம் என்பதை சந்திரபாபுவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சட்டசபையில் அவர் தான், தேவையில்லாத மற்றும் சம்பந்தமில்லாத விஷயங்கள் குறித்து பேசினார். அவருக்கு பதிலடி கொடுக்கப்பட்டதும், அழுகிறார். அனைத்து விஷயத்தையும் அவர் தான் ஆரம்பித்து வைத்தார். சந்திரபாபு விரக்தியில் உள்ளதை மாநில மக்கள் அறிவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement