வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பஞ்சாபில் பொற்கோயிலுக்கு வந்த காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் பிக்பாக்கெட் அடித்தது யார் என சிரோன்மணி அகாலி தளம் கட்சி எம்.பி., ஹர்சிம்ரத் கவுர் வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், பொய் செய்திகளை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலுக்கு வந்தார். அவருடன் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சித்து மற்றும் காங் வேட்பாளர்கள் வந்தனர். பொற்கோயிலில் வழிபாடு நடத்திய ராகுல், அங்குள்ள சமுதாய அன்னதான கூடத்தில் அனைவருடன் சேர்ந்து சாப்பிட்டார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், சிரோன்மணி அகாலிதளம் கட்சி எம்.பி.,யுமான ஹர்சிம்ரத் கவுர் வெளியிட்ட அறிக்கையில், பொற்கோயிலில் ராகுலின் பாக்கெட்டில் திருடியது யார்? சன்னியா? சித்துவா? சுக்ஜிந்தர் சிங்கா? இந்த 3 பேர் மட்டுமே, ராகுல் அருகில் செல்ல இசட் பிரிவு படையினர் அனுமதித்தனர். அல்லது பொற்கோயிலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற மற்றொரு முயற்சியா எனக்கூறியிருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில், எம்.பி., கவுர் தவறான செய்தியை பரப்பி வருகிறார். அவர் சொல்வது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இதுபோன்ற தவறான செய்தியை பரப்புவது பொற்கோயிலை அவமதிப்பதாகும். நீங்கள் பொறுப்புடனும், முதிர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும். மத்திய அமைச்சரவையில் இருந்து கொண்டு விவசாயிகளுக்கு எதிரான கறுப்பு சட்டங்களை அனுமதித்தது நிச்சயம் கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது போன்றதாகும் என தெரிவித்துள்ளார்.
Advertisement