வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: ‘மாநில அரசிடம் நிதி இல்லாத நிலையில் ரூ. 4 கோடி செலவில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு சொகுசு கார் தேவையா’ என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
![]() |
அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பாக, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்கிறது.
இஸ்ரேல் நாட்டில் இருந்து ஏவுகணை மென்பொருள் வாங்குவது தொடர்பாக கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு மறைக்கிறது. விசாரணை முடியும் வரை பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. புதுச்சேரி மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதை அரசு கண்டுகொள்வதில்லை. புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதை, தடுத்து நிறுத்த முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
![]() |
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசிடம் நிதியில்லாத நிலையில், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 40 லட்சம் மதிப்பில், ரூ. 4 கோடி செலவில் 11 சொகுசு கார் வாங்கி உள்ளனர்.
குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை போடவில்லை. ஆனால், சொகுசு கார் வாங்குகின்றனர். மக்கள் நலன் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. சுக வாழ்க்கை வாழ்கின்றனர். ரங்கசாமி முதல்வரான பின்பு, ரவுடியிசம் அதிகரித்துள்ளது. கடை, தொழிற்சாலைகளில் மாமூல் வசூலிக்கின்றனர். போலீசார், ரவுடிகளுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement