இந்திய பெண்கள் அசத்தல்: ஒருநாள் தொடரை கைப்பற்றியது


பல்லேகெலே: இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷபாலி வர்மா, மந்தனா அரைசதம் விளாச, இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–0 எனக் கைப்பற்றியது. சொந்த மண்ணில் இலங்கை அணி ஏமாற்றியது.

இலங்கை சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. பல்லேகெலேயில் இரண்டாவது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

ரேனுகா அசத்தல்: இலங்கை அணிக்கு ஹாசினி (0), விஷ்மி (3), ஹர்ஷிதா (0) ஏமாற்றினர். கேப்டன் சாமரி (27), அனுஷ்கா (25), நிலாக்சி (32) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய அமா காஞ்சனா (47*) ஓரளவு கைகொடுத்தார். இலங்கை அணி 50 ஓவரில் 173 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் ரேனுகா சிங் 4, மேக்னா, தீப்தி சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

சூப்பர் ஜோடி: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி கலக்கல் துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். காஞ்சனா வீசிய 26வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய மந்தனா, வெற்றிக்கு உதவினார். இந்திய அணி 25.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 174 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாலி (71), மந்தனா (94) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் ரேனுகா வென்றார். மூன்றாவது போட்டி வரும் ஜூலை 7ல் பல்லேகெலேயில் நடக்கிறது.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.