பெங்களூரு,-கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அம்ரித் பால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 545 போலீஸ் எஸ்.ஐ., பதவிகளுக்கு 2021 அக்டோபர் 30ல் எழுத்து தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் இந்தாண்டு ஜனவரி 18ல் வெளியானது. இதில், கலபுரகி, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திடுக்கிடும் தகவல்
பா.ஜ., காங்கிரஸ் பிரமுகர்கள், முறைகேடுக்கு துணை போன போலீஸ் அதிகாரிகள் என பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. ‘புளூடூத்’ உபகரணம் பயன்படுத்தி தேர்வு எழுதியது, விடைத்தாள் திருத்தியது, என விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஒவ்வொருவரிடமும் 70 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, முகவர்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.போலீஸ் நியமன பிரிவின் டி.எஸ்.பி., சாந்தகுமார், தலைமை ஏட்டு ஸ்ரீதர், முதல் நிலை ஊழியர் ஹர்ஷா ஆகியோரிடம் நடந்த விசாரணையில், நியமன பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அம்ரித் பால் உத்தரவின்படி, முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அம்ரித் பால், உடனடியாக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரிடம் மூன்று முறை விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடைசியாக ஜூன் 30ல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள், அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ஜூலை 7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி சந்தேஷ், சி.ஐ.டி., போலீசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்நிலையில், அம்ரித் பால் நான்காவது முறையாக நேற்று சி.ஐ.டி., அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். விசாரணை முடிந்ததும் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் டி.எஸ்.பி., சாந்தகுமார் உள்ளிட்ட மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.பின், நால்வரும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அம்ரித் பாலை வரும் 13ம் தேதி வரையும், மற்றவர்களை 8ம் தேதி வரையும், சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், நேற்று வரை, 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்ரித் பால் பின்னணி
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அம்ரித் பால், 1995ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பேட்சை சேர்ந்தவர். எஸ்.ஐ., தேர்வு விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த கருவூலத்தின் சாவி, இவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 25 பதவிகளுக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசி, மற்ற அதிகாரிகளிடம் விடைத்தாள் திருத்துவதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது.