சாதிப்பரா இந்திய பவுலர்கள் * ‘விறுவிறு’ கட்டத்தில் பர்மிங்காம் டெஸ்ட்


பர்மிங்காம்: ஐந்தாவது டெஸ்ட் ‘விறுவிறு’ கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி வெற்றிக்கு முயற்சிக்கலாம். 

இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என முன்னிலையில் உள்ளது. கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த ஐந்தாவது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி பர்மிங்காமில் தற்போது நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா 416, இங்கிலாந்து 284 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 125/3 ரன் எடுத்து 257 ரன் முன்னிலை பெற்றிருந்தது. புஜாரா (50), ரிஷாப் பன்ட் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

புஜாரா ஏமாற்றம்

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. புஜாரா, ரிஷாப் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பிராட்டை அழைத்தார் ஸ்டோக்ஸ். இவர் வீசிய மூன்றாவது பந்தில் புஜாரா (66) அவுட்டானார். ரிஷாப், ஸ்ரேயாஸ் இணைந்தனர். 

ரிஷாப் அரைசதம்

பிராட் பந்தில் பவுண்டரி அடித்து, அரைசதம் கடந்தார் ரிஷாப். 26 பந்தில் 19 ரன் எடுத்த ஸ்ரேயாஸ், பாட்சின் ‘ஷார்ட் பிட்ச்’ பந்தில் ஆண்டர்சனிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். இது இவரது 100வது ‘கேட்ச்’ ஆக அமைந்தது. அடுத்த சில நிமிடத்தில் 57 ரன் எடுத்த ரிஷாப், லீச் பந்தில் அவுட்டானார். ஷர்துல், 4 ரன்னுக்கு அவுட்டானார்.

ஷமி 13 ரன் எடுத்தார். ஜடேஜா, 23 ரன் மட்டும் எடுத்து, ஸ்டோக்ஸ் வேகத்தில் போல்டானார். ஸ்டோக்ஸ் வீசிய 82வது ஓவரின் 4வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய பும்ரா (7), அடுத்த பந்தில் அவுட்டானார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 4, பாட்ஸ், பிராட் தலா 2 விக்கெட் சாய்த்தனர். 

இலக்கு ‘378’

அடுத்து 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இங்கிலாந்து அணி. நான்காவது இன்னிங்சில் இம்மைதானத்தில் சராசரியாக 152 ரன் மட்டுமே எடுக்கப்பட்டன. ஆனால், அலெக்ஸ் லீஸ், கிராலே ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. 44வது பந்தில் லீஸ் அரைசதம் கடந்தார். 

பும்ரா நம்பிக்கை

 இந்த ஜோடி, முதல் 120 பந்தில் 100 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். 21வது ஓவரில் பந்து தனது வட்டவடிவ தன்மையை இழக்க, புதிய பந்து மாற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வந்த பும்ரா, நான்காவது பந்தை 140 கி.மீ., வேகத்தில் வீசினார். இது கிராலேவை (46) போல்டாக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

அடுத்து வந்த போப்பை 3வது பந்தில் வெளியேற்றினார் பும்ரா. மறுபக்கம் 56 ரன் எடுத்து இந்தியாவுக்கு தொல்லை தந்த லீஸ், ரன் அவுட்டானார். ஜோ ரூட், பேர்ஸ்டோவ் இணைந்தனர். சிராஜ் பந்தில், 14 ரன்னில் பேர்ஸ்டோவ் கொடுத்த ‘கேட்ச்சை’ விஹாரி கோட்டை விட இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. 

இருவரும் அரைசதம் விளாசினர். கடைசி வரை இவர்களை பிரிக்கவே முடியவில்லை. நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்து, 119 ரன் மட்டும் பின்தங்கி இருந்தது. பேர்ஸ்டோவ் (72), ஜோ ரூட் (76) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

சபாஷ் ரிஷாப்

பர்மிங்காம் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 146 ரன் விளாசிய ரிஷாப், இரண்டாவது இன்னிங்சில் 57 ரன் எடுத்தார். இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் ஒரு போட்டியில் ஒரு சதம், அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் ஆனார் ரிஷாப். இதற்கு முன் பரூக் என்ஜினியர், இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் 121, 66 ரன் (1973ல்) எடுத்தார். 

 

203

ஆசிய மண்ணுக்கு வெளியே டெஸ்டில் அதிக ரன் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆனார் ரிஷாப். இவர், பர்மிங்காம் டெஸ்டில் மொத்தம் 203 ரன் (146+57) எடுத்தார். அடுத்த இடத்தில் விஜய் மஞ்ச்ரேகர் உள்ளார். இவர் 1953ல் கிங்ஸ்டன் டெஸ்டில், விண்டீசிற்கு எதிராக 161 ரன் எடுத்தார்.

* ரிஷாப் (159, சிட்னி, ஆஸி., 2019), தோனி (151, பர்மிங்காம், இங்கிலாந்து, 2011) அடுத்தடுத்து உள்ளனர். 

* தவிர இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் ரிஷாப் ஆறாவது இடம் பிடித்தார். வினோ மன்கட் (256, 1952), சச்சின் (251, 1996), கவாஸ்கர் (234, 1979), டிராவிட் (217, 2002), பட்டோடி (212, 1967) ‘டாப்–5’ இடத்தில் உள்ளனர்.

 

மெக்கலம் வியூகம்

ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி கேப்டன் ஸ்ரேயாஸ், பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் உள்ளனர். ஸ்ரேயாசின் பலம், பலவீனம் மெக்கலத்துக்கு தெரியும்.

நேற்று ஸ்ரேயாஸ் பேட்டிங் செய்த போது, காலரியில் இருந்த மெக்கலம், ‘இடுப்பு உயரத்துக்கு செல்லுமாறு ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை ஸ்ரேயாசிற்கு வீசுங்கள்,’ என ‘சிக்னல்’ கொடுத்தார். அடுத்த சிறிது நேரத்தில் பாட்ஸ் வீசிய ‘ஷார்ட் பிட்ச்’ பந்தில், ஸ்ரேயாஸ் அவுட்டானார். 

 

55 ரன் 6 விக்

நேற்று இந்திய அணி ஒரு கட்டத்தில் 190/4 ரன் என வலுவான நிலையில் இருந்தது. பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, 55 ரன் எடுப்பதற்குள் கடைசி 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

 

‘சேஸ்’ செய்யலாமா

ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 378 ரன்களை சேஸ் செய்வது கடினம். டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணி, நான்காவது இன்னிங்சில் அதிகபட்சமாக 359 ரன் எடுத்து (எதிர்–ஆஸி., 2019, லீட்ஸ்) வெற்றி பெற்றது. 

* பர்மிங்காம் மைதானத்தில் நடந்த டெஸ்டில் நான்காவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி அதிகபட்சம் 281 ரன் ‘சேஸ்’ செய்து, இங்கிலாந்தை (2008) வென்றது. 

* எனினும் கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக பங்கேற்ற மூன்று டெஸ்டிலும் நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 279, 299, 296 என ‘சேஸ்’ செய்து வென்றது. 

 

123

டெஸ்ட் அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிவேகமாக 100 ரன் சேர்த்த ஜோடி என்ற பெருமை கிராலே–லீசிற்கு கிடைத்தது. இவர்கள் 120 பந்தில் 100 ரன் சேர்த்தனர். 

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.