புதுடில்லி,-பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலாவை சுட்டுக் கொன்ற பின் கொலையாளிகள் துப்பாக்கியை துாக்கிப்பிடித்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய, ‘வீடியோ’வை போலீசார் கைப்பற்றினர்.
பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூசேவாலா, மே 29ல் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபை சேர்ந்த, நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னாய் என்பவர், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதை ஒப்புக் கொண்டார். வேறொரு வழக்கில் கைதாகி டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்சின் ஆட்கள், இந்த கொலையை செய்தது தெரியவந்தது.கொலையாளிகள் மூவர், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
மற்றொரு குற்றவாளியான அங்கித் சிர்சா, 18, மற்றும் சச்சின் விர்மானி ஆகியோர் டில்லியில் நேற்று முன் தினம் கைதாகினர்.இந்த கொலையில் அங்கித் சிர்சா முக்கிய குற்றவாளி என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சித்து மூசேவாலாவை நெருங்கி சென்று, ஆறு முறை துப்பாக்கியால் அங்கித் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.அவரது, ‘மொபைல் போனை’ கைப்பற்றி அதில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கொலையை நிகழ்த்திவிட்டு, ஐந்து குற்றவாளிகளும் காரில் வந்து, துப்பாக்கிகளை துாக்கிப் பிடித்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ கைப்பற்றப்பட்டது.
Advertisement