"சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது நாட்டை பிளவுபடுத்தும்!"- ரகுராம் ராஜன் எச்சரிக்கை


சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில், காங்கிரஸின் 5-வது அகில இந்திய தொழில் வல்லுநர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை?‘ என்ற தலைப்பில் ரகுராம் ராஜன் பேசினார்.

அப்போது, “இந்தியாவில், தாராளமய ஜனநாயகத்துக்கு என்ன நடக்கிறது. உண்மையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தேவையா? ஆம், எங்களின் எதிர்காலம் நமது தாராளமய ஜனநாயகத்தையும் அதன் நிறுவனங்களையும் வலுப்படுத்துவதில்தான் உள்ளது. உண்மையில் இது நமது வளர்ச்சிக்கு மிக அவசியம். இந்தியாவில் இன்று சில தரப்பினரிடையே, ஜனநாயகம் இந்தியாவைத் தடுத்து நிறுத்துகின்றது என்ற எண்ணம் இருக்கிறது. எனவே இந்தியாவுக்கு வலிமையோடு எதேச்சதிகாரமும்கூட தேவை.

ரகுராம் ராஜன்

பெரும்பாலான சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் நாட்டை பிளவுபடுத்தும். அதனுடன் நாட்டில் வெறுப்பையும் அது உருவாக்கும். மேலும் இது வெளிநாட்டின் தலையீட்டால் நாட்டை பாதிக்கக்கூடிய ஒன்றாக மாற்றும். ஒரு நாட்டின் அரசியல்வாதிகள் சிறுபான்மையினரைக் குறிவைத்து, வேலை நெருக்கடியைத் திசைதிருப்ப முயலும்போது என்ன நடக்கும் என்பதற்கு இலங்கை ஒரு உதாரணம்.

வேலைவாய்ப்பு

உலகளாவிய நிதி நெருக்கடி தொடங்கியதிலிருந்து, உண்மையில் ஒரு தசாப்த காலமாக நம்மால் முடிந்த அளவு நாம் சிறப்பாகச் செயல்படவில்லை. நம் இளைஞர்களுக்குத் தேவையான நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலாமையே இந்த மோசமான செயல்திறனின் முக்கிய அளவுகோல்” என்று கூறினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published.