சூர்யாவுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை? – வெளியான தகவல்


சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகவுள்ள புதியப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘விக்ரம்’ உள்ளிட்டப் படங்களை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படம் மீனவர்கள் சம்பந்தமான படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இதற்கான சோதனை படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று, அந்த கிளிம்ப்ஸ் வீடியோவும், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது விஜய்சேதுபதி – சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தில் வெற்றிமாறன் கவனம் செலுத்திவருவதால், ‘வாடிவாசல்’ படம் துவங்குவது தாமதமாகி வருகிறது. இதனால், சில வருடங்களுக்கு முன்னதாக கைக்கூடாமல் போன இயக்குநர் சிறுத்தை சிவா படத்தில், அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

image

இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க, ‘தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியின் இறந்துபோகும் காதலியாக வரும் பாலிவுட் நடிகை திஷா பதானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திஷா பதானி, சூர்யா ஆகிய இருவரும் ‘ஏர்செல்’ விளம்பரத்தில் ஒன்றாக நடித்தநிலையில், தற்போது படத்தில் முதன்முதலாக இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டு வந்தநிலையில், தற்போது திஷா பதானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சூர்யாவின் ‘மாயாவி’, ‘ஆறு’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ ஆகியப் படங்களுக்கு இசையமைத்த தேவிஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் பூஜையுடன், படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


Leave a Reply

Your email address will not be published.