தெலங்கானா மாநிலம், முஸ்தபாத் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மனைவி தீபிகா, மகன் சுங்கபதி பரத்துடன் வசித்துவருகிறார். சுங்கபதி பரத் அருகிலிருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறான். இந்த நிலையில், சுங்கபதி பரத் சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியிலிருக்கும் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறான். சிறுவனைக் கண்ட காவலர்கள், ‘என்ன விஷயம்’ என விசாரித்திருக்கிறார்கள். அப்போது சிறுவன், ‘என் தந்தைமீது புகாரளிக்க வேண்டும்’ எனக் கூற காவலர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

உடனே அந்தச் சிறுவனை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசலுவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிறுவன், “என்னுடைய அப்பா தினமும் குடித்துவிட்டு என் அம்மாவை அடிக்கிறார். அதனால் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. படிக்கவும் முடியவில்லை. உங்களை நம்பி வந்திருக்கிறேன், தயவுசெய்து என் அம்மாவைக் காப்பாற்றுங்கள்” எனக் குழந்தை உருக்கமாகக் கெஞ்சியிருக்கிறான். சிறுவனின் தைரியத்தைப் பார்த்து வியந்த காவல் உதவி ஆய்வாளர், அந்தச் சிறுவனுக்கு ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

அதன் பிறகு, அந்தச் சிறுவனின் தந்தை பாலகிருஷ்ணனை அழைத்து, `மீண்டும் இதுபோல நடந்துகொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்து அனுப்பியிருக்கிறார். மேலும், அந்தச் சிறுவனின் தைரியத்தை பாராட்டி, ‘நன்றாகப் படிக்க வேண்டும்’ என வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்.