“அவன் கண்ணுல பயம் தெரியல” – ஹர்திக் பாண்டியாவின் கண் சிக்னல் வீடியோ வைரல்


தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என ஹர்திக் பாண்டியா கண்ணால் சிக்னல் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கே.எல்.ராகுல் ரன் கணக்கை தொடங்காமல் பெவிலியன் திரும்ப, கேப்டன் ரோகித் ஷர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

100ஆவது போட்டியில் விளையாடிய விராட் கோலி, 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். சூர்யகுமார் 18 பந்துகளில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்டியாவும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசி இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் இந்திய அணி 14 ரன்கள் எடுத்தது.

image

இறுதி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டபோது,  முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க, மூன்றாவது பந்தில் ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்கவில்லை. எனினும் எந்த பதற்றமும் அடையாத பாண்டியா, நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என கண்ணால் சிக்னல் கொடுத்தார். அவர் சொன்னதுபோலவே,  அடுத்த பந்திலேயே சிக்ஸர் விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். களத்தில் அவரது செய்கையும் மற்றும் தன்னால் முடியும் என்று நம்பிக்கையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . ஹர்திக் பாண்டியா கண்ணால் சிக்னல் கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

5 விக்கெட்களை இழந்த இந்திய அணி, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன், ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா… கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link


Leave a Reply

Your email address will not be published.