இந்தியா ‘ஏ’ மீண்டும் வெற்றி: தொடரை கைப்பற்றி அசத்தல்


சென்னை: நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பிரித்வி ஷா அரைசதம் விளாச இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 2–0 எனக் கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ‘ஏ’ அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியுடன் விளையாடுகிறது. அனைத்து போட்டிகளும் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நடந்தது.

 

குல்தீப் ‘ஹாட்ரிக்’: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு சாட் போவ்ஸ் (15), டேன் கிளீவர் (6) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய  ரச்சின் ரவிந்திரா (61), ஜோ கார்டர் (72) அரைசதம் கடந்தனர். சீன் சோலியா (28) ஆறுதல் தந்தார். ஆட்டத்தின் 47வது ஓவரின் கடைசி 3 பந்தில் லோகன் வான் பீக் (4), ஜோ வால்கர் (0), ஜேக்கப் டபி (0) ஆகியோரை அவுட்டாக்கிய குல்தீப் யாதவ், ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

 

நியூசிலாந்து ‘ஏ’ அணி 47 ஓவரில் 219 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

பிரித்வி விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்தியா ‘ஏ’ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் (30) நல்ல துவக்கம் தந்தார். ரஜத் படிதார் (20) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய பிரித்வி ஷா 48 பந்தில் 77 ரன் (3 சிக்சர், 11 பவுண்டரி) விளாசினார். கேப்டன் சஞ்சு சாம்சன் (37) ஓரளவு கைகொடுத்தார்.

பின் இணைந்த ரிஷி தவான் (22*), ஷர்துல் தாகூர் (25*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இந்தியா ‘ஏ’ அணி 34 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.