சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் மன் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு| Dinamalar


புதுடில்லி : ”பஞ்சாபின் சண்டிகர் விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன் கீ பாத்’ என்ற அந்த நிகழ்ச்சியின் 93வது உரை நேற்று நிகழ்த்தப்பட்டது.

பருவநிலை மாற்றம்

அதில் பிரதமர் பேசியதாவது:பருவநிலை மாற்றம் என்பது நம் முன் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை எதிர்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது, நம் ஒவ்வொருவருடைய கடமை. இந்த பருவநிலை மாற்றம் கடல் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, கடற்கரை பகுதிகளில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்.தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்த எட்டு சிவிங்கி புலிகள் கொண்டுவரப்பட்டதில் 130 கோடி இந்தியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய பிரேதச வன உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ள அந்த சிவிங்கி புலிகள் நம் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப மாறி வருவது கண்காணிக்கப்படுகிறது. அவற்றை நேரில் காண பொதுமக்கள் ஆவலாக உள்ளனர். அவற்றை நீங்கள் எப்போது பார்க்கலாம் என்பது விரைவில் அறிவிக்கப்படும். அந்த சிவிங்கி புலிகளுக்கும், அதை பராமரிக்கும் திட்டத்துக்கும் என்ன பெயர் வைக்கலாம் என்பதை, ‘மை கவர்மென்ட்’ செயலி வாயிலாக மக்கள் தெரிவிக்கும் வகையில் போட்டி நடத்தப்படும். அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் சிவிங்கி புலிகளை காணும் வாய்ப்புள்ளது.செப்., 28ம் தேதி, ‘அம்ரித் மஹோத்ஸவ்’ கொண்டாட்டத்தின் மிக முக்கியமான நாள். அன்று சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. எனவே, சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, அவர்களின் லட்சியங்களைப் பின்பற்றி நாட்டை கட்டியெழுப்புவோம். இதுவே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி. தியாகிகளின் நினைவுச் சின்னங்கள், பல்வேறு இடங்களுக்கும் அவர்களின் பெயர்களை சூட்டுவது நம் கடமை உணர்வை துாண்டுகின்றன. அதே போல, செப்., 28ம் தேதியை நாம் கொண்டாட மற்றொரு காரணமும் உள்ளது. அந்த இரண்டு வார்த்தையை நான் இப்போது கூறினால், அது உங்கள் மனதில் எழுச்சியை உண்டாக்கும். ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்பதே அந்த இரு வார்த்தை. இந்த தினத்தில் தான், 2016ல் நம் படையினர், பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினர். தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நேரத்தில் நாம் அவரை நினைவுகூர்வோம். நவீன, சமூக மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் கூட, இந்திய தத்துவம் எவ்வாறு உலகை வழிநடத்தும் என்பதை அவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். சுதந்திரத்திற்குப் பின், நாட்டில் நிலவிய தாழ்வு மனப்பான்மையிலிருந்து நம்மை விடுவித்து நம் அறிவாற்றலை வளர்த்தார்.உலகம் முழுதும், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பலருக்கு மிகப்பெரிய ஆதரவாக சைகை மொழி உள்ளது. ஆனால், சைகை மொழிக்கான முறையான தரநிலைகள், தெளிவான சைகைகள் நம் நாட்டில் இல்லாதது மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. இதை சரி செய்ய, இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2015ல் நிறுவப்பட்டது.இந்த மையம், 10 ஆயிரம் சொற்கள் மற்றும் சைகைகள் அடங்கிய அகராதியை உருவாக்கி உள்ளது. உலக சைகை மொழி தினமான கடந்த 23ம் தேதி, பல்வேறு பள்ளி பாடங்கள் சைகை மொழியிலும் துவங்கப்பட்டுள்ளன.

உறுதி ஏற்போம்

மேலும், யோகாவின் பயன் குறித்து நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த அன்வி என்ற சிறுமி, பிறவியிலேயே மன வளர்ச்சி குறைபாட்டுடன் இருந்தவர். இவர் தொடர் யோகா பயிற்சியால் தற்போது வெகுவாக மீண்டுள்ளார். அவரது உடல் ஆரோக்கியம் மீண்டுள்ளது. மருந்து களின் தேவைகளும் குறைந்து வருகின்றன. இப்படிப்பட்ட அதிசயங்கள் யோகாவால் மட்டுமே சாத்தியம். வரும் நாட்களில் வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. அந்த நேரத்தில் உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே வாங்குவது என நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்., 2ல், காதி கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை நாம் அனைவரும் வாங்க உறுதி ஏற்போம்.இவ்வாறு பிரதமர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.