திருப்திகரமான கிரிக்கெட் பயணம்: ஜூலன் கோஸ்வாமி உருக்கம்


லண்டன்: ‘‘எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் மிகவும் திருப்திகரமாக இருந்தது,’’ என, ஜூலன் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 39. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். வேகப்பந்துவீச்சாளரான இவர் 2002ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார். ஐந்து முறை (2005, 2009, 2013, 2017, 2022) ஐ.சி.சி., உலக கோப்பையில் (50 ஓவர்) விளையாடினார். இதுவரை 12 டெஸ்ட் (44 விக்கெட்), 204 ஒருநாள் (255 விக்கெட்), 68 சர்வதேச ‘டி–20’ (56 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டி (255), சர்வதேச அரங்கில் (355) அதிக விக்கெட் கைப்பற்றிய வீராங்கனைகள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். சமீபத்தில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

இதுகுறித்து ஜூலன் கோஸ்வாமி கூறியது: ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக பயணித்த எனது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இப்பயணம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இந்திய ஜெர்சி அணிந்து, எனது திறமைக்கு ஏற்ப நாட்டிற்கு சேவை செய்ததில் மகிழ்ச்சி. போட்டிக்கு முன்பு, தேசிய கீதத்தை கேட்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு பெருமை கிடைத்ததாக உணர்கிறேன்.

 

கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. குறிப்பாக நிறைய நண்பர்கள் கிடைத்தனர். கிரிக்கெட் வீராங்கனையாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்துள்ளேன். இது, அடுத்த தலைமுறை வீராங்கனைகள் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்ய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டை விட்டு ஒருபோதும் விலகி இருக்க மாட்டேன்.

 

இவ்வாறு ஜூலன் கூறினார்.

 

பி.சி.சி.ஐ., புகழாரம்

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘‘ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றதன்மூலம், ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. பெண்கள் கிரிக்கெட்டிற்கு சிறப்பான சேவை செய்துள்ள இவர், இந்திய பந்துவீச்சின் தலைவராக உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இவரது சாதனைகள் வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கு ஊக்கமாக இருக்கும்,’’ என்றார்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.