மிர்புர்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் ஏமாற்றிய இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. கேப்டன் ரோகித் சர்மாவின் போராட்டம் வீணானது. சொந்த மண்ணில் வங்கதேச அணி 2–0 என தொடரை கைப்பற்றியது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோற்றது. மிர்புரில் இரண்டாவது போட்டி நடந்தது. இந்திய அணியில் ஷாபாஸ் அகமது, குல்தீப் சென் நீக்கப்பட்டு அக்சர் படேல், உம்ரான் மாலிக் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
வாஷிங்டன் அசத்தல்: வங்கதேச அணிக்கு இந்திய பவுலர்கள் தொல்லை தந்தனர். முகமது சிராஜ் ‘வேகத்தில்’ அனாமுல் ஹக் (11), கேப்டன் லிட்டன் தாஸ் (7) வெளியேறினர். உம்ரான் மாலிக் பந்தில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (21) அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் ‘சுழலில்’ சாகிப் அல் ஹசன் (8), முஷ்பிகுர் ரஹிம் (12), ஆபிப் ஹொசைன் (0) சிக்கினர். வங்கதேச அணி 69 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
மெஹிதி சதம்: பின் இணைந்த மகமதுல்லா, மெஹிதி ஹசன் மிராஜ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த மகமதுல்லா அரைதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 148 ரன் சேர்த்த போது உம்ரான் மாலிக் பந்தில் மகமதுல்லா (77) அவுட்டானார். அடுத்து வந்த நசும் அகமது, உம்ரான் பந்தில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய மெஹிதி, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட இவர், ஒருநாள் போட்டி அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 271 ரன் குவித்தது. மெஹிதி (100 ரன், 83 பந்து, 4 சிக்சர், 8 பவுண்டரி), நசும் அகமது (18) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3, சிராஜ், உம்ரான் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
கோஹ்லி ஏமாற்றம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு விராத் கோஹ்லி (5), ஷிகர் தவான் (8) ஜோடி ஏமாற்றியது. அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் (11), லோகேஷ் ராகுல் (14) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பின் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் ஜோடி விக்கெட் சரியாமல் பார்த்துக் கொண்டது. வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது ஸ்ரேயாஸ் (82) அவுட்டானார். அக்சர் படேல் (56) ஆறுதல் தந்தார்.
ரோகித் அரைசதம்: ஷர்துல் தாகூர் (7), தீபக் சகார் (11), முகமது சிராஜ் (2) நிலைக்கவில்லை. எபாதத் ஹொசைன் வீசிய 46வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா, மகமதுல்லா வீசிய 49வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டன. முஷ்தபிஜுர் ரஹ்மான் வீசிய 50வது ஓவரின் 2, 3வது பந்தில் பவுண்டரி அடித்த ரோகித், 5வது பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்ட நிலையில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.
இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 266 ரன் மட்டும் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. ரோகித் (51 ரன், 28 பந்து, 5 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் எபாதத் 3, மெஹிதி, சாகிப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ரோகித் காயம்
இந்தியாவின் சிராஜ் வீசிய 2வது ஓவரின் 4வது பந்தை அனாமுல் ஹக் துாக்கி அடித்தார். அதனை 2வது ‘சிலிப்’ பகுதியில் நின்ற இந்திய கேப்டன் பிடிக்க முயன்று நழுவவிட்டார். பந்து தாக்கியதில் இடது கை கட்டைவிரலில் பலத்த காயமடைந்தார். உடனடியாக ‘பெவிலியன்’ திரும்பிய இவருக்கு, ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. இதனால் இந்திய அணியை துணை கேப்டன் லோகேஷ் ராகுல் வழிநடத்தினார். அதன்பின் ரோகித் ‘பீல்டிங்’ செய்ய களமிறங்கவில்லை. பேட்டிங்கில், வழக்கமாக துவக்க வீரராக வரும் இவர், பின்வரிசையில் 9வது இடத்தில் வந்தார். இதனையடுத்து இவர், வரும் டிச. 10ல் சாட்டோகிராமில் நடக்கவுள்ள 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார். இவர், டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பது சந்தேகம்.
காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற இந்திய வீரர்களான தீபக் சகார் (தொடையின் பின்பகுதி), குல்தீப் சென் (முதுகு பகுதி) 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினர்.
தொடரும் சோகம்
வங்கதேச மண்ணில் ஏமாற்றிய இந்திய அணி, தொடர்ந்து 2வது முறையாக ஒருநாள் தொடரை கோட்டைவிட்டது. கடைசியாக 2015ல் வங்கதேசம் சென்ற தோனி தலைமையிலான இந்திய அணி 1–2 என ஒருநாள் தொடரை பறிகொடுத்தது.
Advertisement