பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது| Dinamalar


பரபரப்பான சூழ்நிலையில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடியது. இதில், புதிதாக 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து, எதிர்க்கட்சிகள் அரசுக்கு நெருக்கடி தர தயாராகி வருகின்றன. இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று துவங்கிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் , 29 வரை மொத்தம், 23 நாட்கள் நடக்கவுள்ளது; 17 அமர்வு கள் நடக்க உள்ளன.புதிய பார்லி., கட்டட கட்டுமான பணிகள் முழுமை பெறாததை அடுத்து, பழைய கட்டடத்தில் நடக்கப் போகும் கடைசி கூட்டத்தொடராக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இளம் எம்.பி.,க்களுக்கு விவாதத்தின் போது அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். பார்லிமென்ட் சுமூகமாக நடப்பது அவசியம். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

லோக்சபா துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபா துவங்கியதும், அவை தலைவராக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்று கொண்டார். அவரை வரவேற்று பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் கார்கே மற்றும் பல கட்சியினர் பேசினர்.

இதற்காக, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சபை தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், நேற்று காலை நடந்தது. பார்லி., நுாலக கட்டட அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் வரவில்லை. எனவே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், பியுஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்., இடது சாரிகள், சிரோன்மணி அகாலிதளம், சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்., உள்ளிட்ட முக்கிய கட்சிகளின், பார்லி., தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில், கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்கள் குறித்த விபரங்களை விளக்கியதோடு, சபையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு பிரச்னையை வலியுறுத்தின.

ஆலோசனை கூட்டம் முடிந்த பின், பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:மொத்தம் 47 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அவற்றில், 31 கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். வந்திருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென குறிப்பிட்டனர். இவற்றை அரசு கவனத்தில் வைத்துள்ளது.குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்காக நாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை புறக்கணிப்பதாக கூறுவது தவறு. அவ்வாறு குற்றம் சுமத்துவதை கண்டிக்கிறோம். காரணம், வரும் 24 மற்றும் 25 தேதிகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: உச்ச நீதிமன்ற, ‘கொலீஜியம்’ நடைமுறை தொடர்பாக, நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்னை தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற முக்கிய அமைப்புகள், தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையத்திற்கு அவசர கதியில் ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சீன எல்லைப் பிரச்னையும் ஓயவில்லை. காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். ஹிந்தி திணிப்பு குறித்து பல்வேறு மாநிலங்களிலும் கொந்தளிப்பான நிலை உள்ளது. கூட்டாட்சி தத்துவத்துக்கும், நடைமுறைக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இவை குறித்தெல்லாம் சபையில் கேள்விகள் எழுப்ப திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசிடம் பதில் பெறுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இரு மசோதாக்களுக்கு தி.மு.க., எதிர்ப்பு!

தி.மு.க., – எம்.பி., பாலு கூறுகையில், ”இந்த கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில், கூட்டுறவு மசோதா, வன மசோதா ஆகியவையும் அடக்கம்.

”இந்த இரு சட்டத் திருத்த மசோதாக்களையும், தி.மு.க., எதிர்க்கிறது. இந்த மசோதாக்களை, நிலைக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும். சென்னை, ‘மெட்ரோ’ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தர வேண்டும்,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link


Leave a Reply

Your email address will not be published.