மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போர்மேனுக்கு சிறை| Dinamalar


இந்திய நிகழ்வுகள்

இளம் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த ‘யு டியூபர்’ கைது

புதுடில்லி-புதுடில்லியில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கவைத்து விடுவதாக மிரட்டி, இளம் தொழில் அதிபரிடம் இருந்து ௮௦ லட்சம் ரூபாயை பறித்த, பிரபல பெண் ‘யு டியூபரை’ போலீசார் நேற்று கைது செய்து, அவரது கணவரை தேடி வருகின்றனர்.

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபல யு டியூபராக இருக்கும் நம்ரா காதிரை, 22, லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இவரது கணவர் விராட் பெனிவால்.

இந்நிலையில், புதுடில்லியில் விளம்பர நிறுவனம் நடத்தி வரும் தினேஷ் யாதவ், ௨௧, என்ற தொழில் அதிபருடன், நம்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் யு டியூபில் விளம்பரம் செய்வது குறித்து ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

நம்ரா காதிருக்கு இரண்டு தவணையாக ௨ லட்சத்து ௫௦ ஆயிரம் ரூபாய் தினேஷ் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தினேசை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக நம்ரா தெரிவித்துள்ளார். இதற்கு தினேசும் சரி என கூறியுள்ளார். பின் இருவரும் சேர்ந்து மது அருந்திய பின், இரவில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

மறுநாள் காலையில் தினேஷ் எழுந்தவுடன், அவரிடம் நம்ரா லட்சக்கணக்கில் பணம் கேட்டுள்ளார். ஆனால், தினேஷ் தர மறுத்துஉள்ளார்.

இதையடுத்து, நம்ராவும், விராட்டும் சேர்ந்து, பாலியல் வழக்கில் சிக்க வைத்து விடுவதாக, அவரை மிரட்டியுள்ளனர். இதில் பயந்த தினேஷ், இதுவரை ௮௦ லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில், இது குறித்து, தினேஷ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, நம்ரா காதிரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைமறைவான விராட் பெனிவாலை தேடி வருகின்றனர்.

ரூ.121 கோடி போதை மாத்திரை குஜராத் சோதனையில் சிக்கியது

ஆமதாபாத்-குஜராத்தில் மருந்துக் கடைக்காரர் வீட்டில் இருந்து 121 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குஜராத்தில், பயங்கரவாத தடுப்புப் படையினர், வதோதராவில் உள்ள சைலேஷ் கட்டாரியா என்ற மருந்துக் கடைக்காரரின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 121.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 24.28 கிலோ ‘மெப்ட்ரோன்’ என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கடந்த 29ம் தேதி வதோதராவின் புறநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, 478 கோடி ரூபாய் மதிப்புள்ள மெப்ட்ரோன் மற்றும் அதன் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுமிக்கு செருப்பு மாலை விடுதி காப்பாளர் பணி நீக்கம்

பேதுல்-மத்திய பிரதேசத்தில் பணம் திருடிய சந்தேகத்தில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடுதி வார்டன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பேதுல் மாவட்டம் தம்ஜிபுரா கிராமத்தில் பழங்குடியின மாணவியர் விடுதி உள்ளது.

இதில், தங்கியுள்ள ஒரு மாணவி வைத்திருந்த 400 ரூபாய் பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய விடுதியின் பெண் வார்டன், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி மீது சந்தேகப்பட்டார்.

உடனே அந்தச் சிறுமியின் முகத்தில் பவுடர் மற்றும் கரித்துாளை பூசி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, விடுதி வளாகத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் பற்றி, வார இறுதியில் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் சிறுமி தெரிவித்தாள்.

மகள் கூறியதை கேட்டு அதிர்ந்த தந்தை, உடனடியாக மாவட்ட கலெக்டர் அமன்பிர் சிங்கிடம் புகார் செய்தார்.

இது குறித்து, உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

விசாரணை நடத்திய பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் ஷில்பா ஜெயின், விடுதி கண்காணிப்பாளரை உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், ”பணத்தை உண்மையில் திருடியது யார் என்பது குறித்து விசாரிக்கப்படும்,” என்றார்.

இதுகுறித்து பேசிய சிறுமியின் தந்தை, ‘என் மகள் இனிமேலும் அந்த விடுதியில் தங்கி படிக்க விரும்பவில்லை’ என கண்ணீர் மல்க கூறினார்.

தமிழக நிகழ்வுகள்

ராமநாதபுரத்தில் போலி ஹால் மார்க் நிறுவனம் 15 புவுன் நகைகள் பறிமுதல்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் உரிமம் இல்லாமல் போலியாக நகைகளில் ஹால் மார்க்முத்திரையிட்ட நிறுவனத்தில்15 பவுன் நகைகளை இந்திய தர நிர்ணயம்அமைப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் நகரில் அனுமதி பெறாமல் நகைகளுக்கு ஹால்மார்க் 916 முத்திரையிடும்நிறுவனம் செயல்படுவதாக இந்திய தர நிர்ணயம் அமைப்பு மதுரை கிளை அலுவலகத்திற்குபுகார் வந்தது.

இதையடுத்து மதுரை கிளை இந்தியதர நிர்ணய அமைப்பு தலைவர் தயனந்த் உத்தரவின்படிஇணை இயக்குனர்கள் ரமேஷ், ஹேமலதா பனிக்கர், துணை இயக்குனர்மெர்சி ராணி ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் விஜயா ராமலிங்கம் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

போலி ஹால்மார்க் லோகோ, முத்திரையிடப்பட்ட 120 கிராம் (15 பவுன்) நகைகளை பறிமுதல் செய்தனர்.

இணை இயக்குனர் ரமேஷ் கூறுகையில், ராமநாதபுரத்தில் உரிமம் பெற்றுஹால்மார்க் முத்திரையிட ஒரு மையம் மட்டுமே செயல்படுகிறது. போலியாக முத்திரையிட்டால் 2016 இந்திய தர நிர்ணய சட்டப்படி ரூ.2 லட்சம் வரை அபராதம், ஓர் ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.

தொண்டி அருகே 239 ஜெலட்டின் பறிமுதல்

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 239 ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொண்டி கடலோர காவல் எஸ்.ஐ., அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாசிபட்டினம் கலங்கரை விளக்கம் அருகே ஒரு கி.மீ.,யில் கடற்கரையில் ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் புதைத்து வைக்கபட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சென்று 239 ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர். இது தொடர்பாக தொண்டி புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணனை தேடுகின்றனர்.

போலீசார் கூறுகையில், கடலில் வெடிகளை வெடிக்க செய்து மீன்களை பிடிக்க இவற்றை புதைத்து வைத்துள்ளனர். இவை எங்கிருந்து வாங்கப்பட்டது என விசாரிக்கிறோம், என்றனர்.

மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் போர்மேனுக்கு மூன்றாண்டு சிறை

தேனி:தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியில் புதிய வீட்டுக்கான மின் இணைப்பு வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேன் சிவச்சாமிக்கு 55, மூன்றாண்டு சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

latest tamil news

சுருளிபட்டியில் மகேந்திரன் புதிய வீடு கட்டினார். இதற்கு மின் இணைப்பு கோரி மின்வாரிய அலுவலக உதவி பொறியாளரிடம் 2015 ஜனவரியில் விண்ணபித்தார். உதவி பொறியாளர், போர்மேன் ஆக பணிபுரியும் சுருளிபட்டி மின்வாரிய அலுவலக தெருவை சேர்ந்த சிவச்சாமியை 55, சந்திக்க அறிவுறுத்தினார். அவரை 2015 பிப்., 13ல் சந்தித்த மகேந்திரனிடம், ‘மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம், லஞ்சமாக ரூ.5 ஆயிரம் என, மொத்தம் ரூ.7 ஆயிரம் வழங்கினால் மின் இணைப்பு வழங்கப்படும்’ என, தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் பேரம் பேசியதால் ரூ.1000 குறைத்து ரூ.6 ஆயிரம் வழங்கினால் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

தேனி லஞ்சஒழிப்புத்துறை போலீசில் மகேந்திரன் புகார் அளித்தார். 2015 பிப்., 24ல் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சிவச்சாமி பெற்ற போது போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவசங்கரன் ஆஜரானார். சிவச்சாமிக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.

ரூ.5 லட்சம் கடனுக்கு 32 லட்சம் கேட்டு மிரட்டல்: விவசாயி தற்கொலை

வேப்பூர்:கடனுக்கு அதிக வட்டி கேட்டு மிரட்டியதால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

latest tamil news

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 39; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு மயக்கமடைந்த நிலையில், வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர், பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளதாக கூறி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அங்கு, ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ராஜ்குமார், பெரியநெசலுார் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு 32 லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதுபோல, இரண்டு லட்ச ரூபாய் கொடுத்த மணிகண்டன் என்பவரும், எட்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இருவரும் ஆபாசமாக திட்டியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த ராஜ்குமார் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, வட்டிக்கு பணம் கொடுத்த அந்த பெண் மற்றும் மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

நாய்களை கொன்ற ஊராட்சி தலைவி கணவர் கைது

விருதுநகர்:விருதுநகர் ஓ. சங்கரலிங்காபுரத்தில் 40க்கும் மேற்பட்ட நாய்களை கொன்ற ஊராட்சி தலைவி கணவர் மீனாட்சி சுந்தரம், அதற்கு உதவிய மாரியப்பன், தங்கபாண்டி, அய்யனார் கைது செய்யப்பட்டனர்.

ஓ. சங்கரலிங்காபுரம் மக்கள் ஊராட்சி தலைவி நாகலட்சுமியிடம் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் குழந்தைகள், பெண்கள், முதியோர் பாதிக்கப்படுவதாக புகார் அளித்தனர். இதையடுத்து மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட நால்வரும் நாய்களை சுருக்கு கம்பிகளை கொண்டும் கட்டையால் தாக்கியும் கொன்றனர்.

குமாரபுரத்தை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் சுனிதா வீடியோ ஆதாரத்தோடு புகார் அளித்தார். இதையடுத்து 4 பேரையும் ஆமத்தூர் போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் நேற்று கைது செய்தார்.

வழிப்பறி செய்ய திட்டம்: மதுரையை சேர்ந்த ஏழு பேர் கைது

கமுதி-கமுதி எஸ்.ஐ., முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோட்டைமேடு மின்வாரிய அலுவலகம் அருகே போலீசார் வருவதை கண்டு சிலர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்தனர்.

latest tamil news

விசாரணையில், இவர்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாண்டிய ராஜன் 33, சரவணகுமார் 24, வல்லரசு 22, அவனியாபுரம் காளீஸ்வரன் 33, அச்சம்பட்டு சிவசங்கர் 22, விக்னேஸ்வரன் 22, சிலைமான் உசேன் 24, என தெரிய வந்தது. ஏழு பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வந்த கார், டூவீலரை சோதனை செய்த போது ஒரு வாள், ஐந்து கத்திகள், மிளகாய் பொடி இருந்தது.

இதையடுத்து விசாரித்த போது முன்பகை காரணமாக மண்டலமாணிக்கம் அருகே மறக்குளத்தை சேர்ந்த பாலமுருகனை கொலை செய்ய வந்ததாகவும், அவர் தப்பி விட்டதாகவும், மேலும், செலவுக்கு பணம் இல்லாததால் கமுதி அருகே வழிப்பறியில் ஈடுபட்டு மதுரை செல்ல திட்டம் தீட்டியதாக கூறினர்.

கமுதி இன்ஸ்பெக்டர் விமலா வழக்கு பதிந்து ஏழு பேரையும் கைது செய்து கார், டூவீலர், வாள், கத்திகளை பறிமுதல் செய்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link


Leave a Reply

Your email address will not be published.