கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூரங்காடி பாரூக் நகர் பகுதியைச் சேர்ந்த பகத் – ஸமீரா தம்பதியின் மகள் பாத்திமா ரஹா. ஒன்பது வயதான பாத்திமா ரஹா, கொடிஞ்ஞி பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 1-ம் தேதி, தனது அம்மா ஸமீராவின் வீடான முனியூர் களத்திங்கல்பாறைக்குச் சென்றிருந்தார். அங்கு பாத்திமா ரஹாவுக்கு வயிற்றுவலி, வாந்தி உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதையடுத்து திரூரங்காடி தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். சிறுமியின் மாதிரிகளை பரிசோதித்ததில், அவருக்கு ஷிகல்லா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
ஷிகல்லா வைரஸ் தொற்றால் சிறுமி மரணம் அடைந்ததை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சிறுமியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் சிறுமியின் வீடு மற்றும் சிறுமியின் பாட்டி வீட்டில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவருக்கு வாந்தி ஏற்பட்டதை தொடர்ந்து, திரூரங்காடி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கேரளாவில் 2018-ம் ஆண்டு ஷிகல்லா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. உணவு, அசுத்தமான தண்ணீர் மூலமும், ஏற்கெனவே தொற்று உள்ளவர்களின் தொடர்பு மூலமும் ஷிகல்லா வைரஸ் பரவுகிறது. வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்டவை ஷிகல்லா வைரஸ் தொற்றின் அறிகுறிகள். வைரஸ் பாதித்த ஒன்று முதல் ஏழு நாள்களில் அறிகுறிகள் தென்படும். உடலை சுத்தமாகப் பேணுதல், கைகளை எப்போதும் சுத்தமாகக் கழுவுதல், கொதிக்கவைத்த குடிநீரை குடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஷிகல்லா வைரஸ் தொற்றாமல் தடுக்கலாம். வயிறு வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தை அணுக வேண்டும்” என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.