ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி!| Dinamalar


புதுடில்லி-ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை கோரும் வழக்கில் நேற்றும் விறுவிறுப்பான வாதங்கள் நடந்தன. வழக்கு தொடர்ந்தோர், தமிழக அரசு வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற அமர்வு பல கேள்விகளை முன்வைத்தது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்துவதற்காக தமிழக அரசு, ௨௦௧௭ல் அவசர சட்டம் இயற்றியது.

இதை எதிர்த்தும், ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரியும் தொடர்ந்த வழக்குகளை, நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

முந்தைய விசாரணைகளைப் போலவே, நேற்று நடந்த விவாதத்தின்போதும் பல கேள்விகளை அமர்வு எழுப்பியது. அப்போது அமர்வு கூறியதாவது:

இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் சில புகைப்படங்கள், பத்திரிகை செய்தி நகல்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காளைகள் துன்புறுத்தப்படுவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசு கொண்டு வந்த அவசர சட்டம் மற்றும் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த புகைப்படங்களை வைத்து அந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று கூற முடியுமா? அது மிகவும் ஆபத்தாகும்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சாலை விபத்துகளில் மக்கள் இறப்பதால் சாலைகளில் பயணிக்கக் கூடாதா என்று கேட்டுள்ளார்.

அப்படியானால் உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தும், ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதா?

இவ்வாறு அமர்வு கூறியது.

இதற்கு முகுல் ரோஹத்கி கூறியதாவது:

விரைவு நெடுஞ்சாலை சாலைகளை அமைத்துள்ள அரசு, ௧௨௦ கி.மீ., வேகத்தில் பயணிக்கலாம் என்று கூறுகிறது. விபத்து ஏற்பட வேண்டும் என்று அரசு விரும்பவில்லை.

எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதையே அரசு கூறுகிறது. அதுபோலவே, எச்சரிக்கையுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும்படி அரசு அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link


Leave a Reply

Your email address will not be published.