`எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்’-யு19 மகளிர் உலகக்கோப்பை இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதி


மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் யு19 அணி, அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்று 4 பிரிவாக விளையாடிய இந்த தொடரில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி, சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, அரையிறுதியில் இந்திய அணி இன்று நியூசிலாந்தைச் சந்தித்தது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

image

நியூசிலாந்து மகளிர் யு-19 அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. குறிப்பாக, முதல் 7 ஓவர்களிலேயே அந்த அணி 3 விக்கெட்களை இழந்தது. என்றாலும் அந்த அணியில் ஓரளவு தாக்குப்பிடித்த ஜார்ஜியா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பர்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய யு19 மகளிர் அணியில் தொடக்க பேட்டர்களாக கேப்டன் ஷபாலி வர்மாவும், ஸ்வேதா ஷெராவத்தும் களமிறங்கினர். வழக்கம்போல் இந்த ஆட்டத்திலும் ஷெராவத் அதிரடி காட்டினார். ஷபாலி வர்மா 10 ரன்களில் வெளியேற, ஷெராவத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அணியையும் வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் சென்றார். அவர், 45 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக இருந்த மற்றொரு வீராங்கனையான செளமியா திவாரி 22 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.

image

நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்திய யு10 மகளிர் அணி, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, இந்தியாவுடன் வரும் ஞாயிறன்று (ஜனவரி 29) விளையாட உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link


Leave a Reply

Your email address will not be published.