ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சித் தலைவராக ஜனார்த்தனனும், துணைத் தலைவராக பி.ஏ.சிதம்பரமும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் புளியம்பட்டி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் நகராட்சித் தலைவர் ஜனார்தனன், துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளானது.
இந்தப் புறக்கணிப்பின் பின்னணி குறித்து நகராட்சித் தலைவர் ஜனார்த்தனனிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர், “குடியரசு தின விழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டதுடன், அவர்கள் கொடி ஏற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அரசு அறிவிப்பை மீறி நகராட்சி ஆணையர் செய்யது உசேன் தன்னிச்சையாகச் செயல்பட்டு, குடியரசு தினத்தன்று தன்னுடைய பெயரைப் போட்டு அவரே கொடி ஏற்றுவதாகக் குறிப்பிட்டு பத்திரிகை அச்சிட்டிருந்தார். இது குறித்து என்னிடமோ, கவுன்சிலர்களிடமோ கலந்தாலோசனை செய்யாமல், 25-ம் தேதி இரவு 8:30 மணிக்குத்தான் அதன் அழைப்பிதழை எனக்குக் கொடுத்தார். அந்த அழைப்பிதழில் எனது தலைமையில், ஆணையாளர் செய்யது உசேன் கொடி ஏற்றுவதாக அச்சிடப்பட்டிருந்தது. பட்டியலினத் தலைவர்களும், பெண் தலைவர்களும் கொடியேற்றுவதை உறுதிபடுத்துமாறு தலைமைச் செயலர் அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறார். அதையும் மீறி உங்கள் பெயரைப் போட்டு அழைப்பிதழை தன்னிச்சையாக அச்சிட்டிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, `எனக்குத்தான் கொடி ஏற்றும் அதிகாரம் இருக்கிறது’ என்று கூறினார். அதனால், இது குறித்து எங்களது துணைத் தலைவர், கவுன்சிலர்களுடன் கலந்து பேசி, குடியரசு தின விழாவை புறக்கணிப்பது என்று முடிவு செய்தோம். சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியாவும், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் நகராட்சியில் அதன் தலைவர் ஜானகி, பவானி நகராட்சியில் தலைவர் சிந்தூரி ஆகியோர் கொடி ஏற்றினர்.
