பஞ்சாபில் போலீசுக்கு முழு சுதந்திரம் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு| Arvind Kejriwal speech on full independence for police in Punjab


அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலத்தில் நேற்று 400 புதிய ‘மொஹல்லா’ கிளினிக்குகளை, முதல்வர் பகவந்த்மான் மற்றும் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த்மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஏற்கனவே 100 மொஹல்லா கிளினிக்குகள் இயங்குகின்றன. இந்நிலையில் நேற்று, மாநிலம் முழுதும் மேலும் 400 கிளினிக்குகளை அமிர்தசரஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பகவந்த் மான், புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங், ஆம்ஆத்மி எம்.பி., ராகவ் சதா உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

மாநிலம் முழுதும் 10 மாதங்களில் 500 மொஹல்லா கிளினிக்குகளை திறந்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். இதேபோல், தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

ஆம் ஆத்மி ஆட்சி அமைத்த பிறகு மாதத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என கூறியிருந்தோம். பகவந்த்மான் அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேபோல், 10 மாதங்களில் 26,000 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் துறையை மேம்படுத்த 36 அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக சிங்கப்பூர் அனுப்ப முடிவு செய்ய-ப்பட்டுள்ளது.

தலைநகர் டில்லியைப் போலவே, பஞ்சாப் அரசும் வீட்டு வாசலுக்கே சென்று சேவை வழங்கும். இதனால், 6,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் வைக்க போலீசுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்வர் பகவந்த்மானின் பணிகள் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link


Leave a Reply

Your email address will not be published.