பிபிசி ஆவணப்படம்: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீஸாரிடையே தகராறு; 144 தடை உத்தரவு அமல்!


2002-ல் குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சியின்போது ஏற்பட்ட கலவரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை, கடந்த வாரம் பிபிசி ஊடகம் வெளியிட்டது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியானபோதே, மத்திய அரசு அதை இந்தியாவில் தடைசெய்தது.

பிபிசி ஆவணப்படம்

இருப்பினும் பல்வேறு அரசியல் கட்சிகள், இடதுசாரி அமைப்புகள் மத்திய அரசின் இத்தகைய செயலுக்குக் கடும் கண்டனங்கள் தெரிவித்துவரும் அதேவேளையில், ஆவணப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.

இப்படியான சூழலில், பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள், அவர்களாகவே முன்வந்து ஆவணப்படத்தை திரையிட்டுவருகின்றனர். காங்கிரஸ் சார்பிலும் கேரளா உட்பட சில இடங்களில் ஆவணப்படம் திரையிடப்பட்டுவருகிறது. அதேசமயம் பல இடங்களில் ஆவணப்படத்தை திரையிடும் மாணவர்கள், இடதுசாரி அமைப்புகளுக்கும், போலீஸுக்குமிடையே தகராறு ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன.

ஜே.என்.யு

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புகூட ஜே.என்.யு-வின் மாணவர்கள், ஆவணப்படத்தைத் திரையிட முயன்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து, அவரவர் தங்களது லேப்டாப், செல்போன்களில் ஆவணப்படத்தைப் பார்த்தபோது, சிலர் அவர்கள்மீது கல் வீசி கலவரத்தை உண்டாக்கினர்.

டெல்லி பல்கலைக்கழகம்

இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று மாலை ஆவணப்படத்தை திரையிடுவதில் மாணவர்களுக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. முதலில் ஆவணப்படத்தைத் திரையிட மாணவர்கள் குழுமியிருந்தபோது போலீஸார் அவர்களைக் கலைந்துபோகுமாறு கூறியிருக்கின்றனர்.

அதன்பிறகு மாணவர்களுக்கும் போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ள ஏற்பட, சில மாணவர்களை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றினர். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Source link


Leave a Reply

Your email address will not be published.