பிக் பாஸ் 6 நாள் 84: வெளியேறினார் மணிகண்டன்; விக்ரமனுக்கு அசிம் தந்த பரிசு!|bigg boss season 6 day 84 highlights


‘பிடிச்ச பொருளை மத்தவங்களுக்கு பரிசளிங்க’

“இந்த வீட்டில் உங்களுக்குன்னு சில பிடித்தமான அதிர்ஷ்டப் பொருட்கள் இருக்குமில்லையா.. சின்னதா இருந்தாலும் பரவாயில்லை. அதைக் கொண்டு வாங்க” என்றார் கமல். ஒவ்வொருவரும் அதைக் கொண்டு வர “இதை யாருக்குத் தந்தா உங்க நட்பு உருவாகும், வளரும், புதுப்பிக்கப்படும்-ன்னு நெனக்கறீங்களோ, அவங்களுக்கு கொடுங்க” என்றார். தனக்கு அந்தரங்கமாகப் பிடிக்கும் பொருளை ஒருவர் இன்னொருவருக்கு பரிசாக அளிக்கச் சொல்வது சற்று நெருடலான விஷயம்தான். ஆனால் நட்பிற்காக விட்டுத்தரலாம் என்கிற வகையில் முக்கியமானது. “வெளிய வாங்க . உங்களுக்கு ஒரு நல்ல பிரெண்டா இருப்பேன்’ என்று சொல்லி மைனாவின் கணவர் யோகி தந்து விட்டுச் சென்ற ரோஜாப்பூவைப் பற்றி சொல்லும் போது நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் ஷிவின்.

பொருட்களை அடுத்தவர்களுக்கு தரும் நேரம். தனது ‘லக்கி ‘செயினை விக்ரமனுக்கு அளித்த ‘அவர் எனக்கு பிணைப்பு இதுவரைக்கும் உருவாகலை. இனிமேல் ஆரம்பிப்பேன். வெளியே போய் தொடர்வேன்” என்று மணிகண்டன் சொன்னது நிச்சயம் இனிய அதிர்ச்சி. மணிகண்டனின் நல்லியல்பு தெரிந்தது. (அடப்பாவி மனுசா.. வெளில போற நேரத்துல இப்படிச் செய்யறீங்களே?!) இதைப் போலவே அசிமும் தன் பரிசை விக்ரமனிடம் அளித்தது முக்கியமான தருணம். (சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா மொமண்ட்!). இதில் ஷிவினிற்கும் மைனாவிற்கும் இடையில் நடந்த பரிமாற்றம்தான் குறும்பானது.

பிக் பாஸ் 6 நாள் 84: அசிம்

பிக் பாஸ் 6 நாள் 84: அசிம்

“என் ஃபேமிலி போட்டோவைத் தரமாட்டேன். எனக்கு கிடைச்ச ‘சூப்பர் ஸ்டார் விருதை’ ஷிவினுக்குத் தரேன். அவ தமிழ்நாட்டோட சூப்பர் ஸ்டார்’ என்று மைனா தர ‘ஹா’வென்று வாய் பிளந்து ஆச்சரியப்பட்ட ஷிவின், பிறகு குறும்பாக ‘அந்தப் போட்டோவைத் தந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்’ என்று சொல்ல ‘அஸ்க்கு புஸ்க்கு’ என்கிற மாதிரி கையசைத்தார் மைனா. தன் செல்ல தலையணையை, நெருக்கமான தோழியான ஷிவினுக்குத் தந்து நெகிழ்ச்சியாக ரச்சிதா பேசப் பேச ஷிவினின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. பதிலுக்கு தன் ரோஜாப்பூவை ரச்சிதாவிற்கு தந்து மகிழ்ந்தார். இந்த செஷனில் அதிக பரிசுகளைப் பெற்றிருந்தவர் ‘விக்ரமன்’தான். ‘நீங்க SAVED:” என்று உடனே சொல்லி விக்ரமனுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தார் கமல்.

“அசிம்.. உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். வெளில தனிமையா இருந்துட்டேன்னு சொன்னீங்க. அப்படி இருக்காதீங்க. பழகுங்க. காலேஜ்ல அந்த வாய்ப்பு இருந்திருக்கும். எல்லாத்தையும் ஓப்பனா பேசிடுவேன். தொழில் சார்ந்த இடத்தில் தயக்கம் வந்துடும். இங்கு பெற்ற அறிவை உங்களின் வெளியுலக அனுபவத்திற்கு முதலீடாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை சொல்லி பிரேக்கில் சென்றார் கமல். மணிகண்டன், விக்ரமனுக்கு பரிசளித்த விஷயத்திற்காக மிகவும் பாராட்டினார் மைனா. (இதுதான் நட்பிற்கு அழகு!). கதிரவனுக்கு சில டிப்ஸ்கள் சொன்னார் விக்ரமன்.


Leave a Reply

Your email address will not be published.