அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக, பா.ஜ.க-வை எதிர்த்துவரும் சூழலில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தற்போது காங்கிரஸ் எதிர்ப்பில் இருக்கும் சில எதிர்க்கட்சிகள்கூட ஒன்றாக பா.ஜ.க-வைச் சாடிவருகின்றன.

இதன் ஒருபகுதியாக, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், எதிர்க்கட்சி எம்.பி-க்களுடன் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தி.மு.க உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் கலந்துகொண்டனர்.