சென்னை அமைந்தகரையில் செயல்பட்ட `ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் டெபாசிட் தொகைக்கு மாத வட்டியாக 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை வழங்கப்படும் என அறிவித்தது. 2020-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் 2022 மே மாதம் வரை சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 2,400 கோடி ரூபாய் வரை முதலீடுகளைப் பெற்றது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு மாத வட்டியையும், அசல் தொகையையும் திருப்பித் தராமல் ஏமாற்றியது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாரளித்தனர். அதனடிப்படையில் அந்த நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், இயக்குநர்கள், முக்கிய ஏஜென்ட்டுகள் என 22 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதில் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராமன், ஹரீஷ், கூடுதல் இயக்குநர்கள் மாலதி, நாகராஜ், மேனேஜர்கள் பேச்சி முத்துராஜ், அய்யப்பன், ஏஜென்ட் ரூசோ ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிறுவனத்தின் அட்மின் டைரக்டராக விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் இருந்தார். அவர் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தார். விசாரணையில் அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லுக்அவுட் நோட்டீஸைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விமான நிலையங்களுக்கு அனுப்பிவைத்திருந்தனர். இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னைக்கு வந்த மைக்கேல்ராஜை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்தனர்.
இது குறித்துப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நம்மிடம் பேசுகையில், “கைதுசெய்யப்பட்ட மைக்கேல் ராஜ், ஆன்லைன் மூலமாகப் பெற்ற டெபாசிட்டுகளின் வங்கிக் கணக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறார்.

டெபாசிட்டுகள் குறித்தும் ஆருத்ரா நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்தும் மைக்கேல்ராஜுக்கும் தெரியும். அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். கடந்த பத்து மாதங்களாக துபாயில் பதுங்கியிருந்த அவரை சென்னை விமான நிலையத்தில்வைத்து கைதுசெய்தோம். விசாரணையின்போது ஆருத்ரா கோல்டு நிறுவனம் பெற்ற முதலீடுகளை சொத்துகளாக வாங்கிய தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. தொடர்ந்து அவரிடம் விரிவான விசாரணை நடத்தவேண்டியிருப்பதால், மைக்கேல்ராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது ஆருத்ரா கோல்டு நிறுவனம் குறித்து முக்கியத் தகவல்கள் தெரியவரும்” என்றனர்.