மூணாறு:கேரளாவல் அரிசி கொம்பன் எனும் காட்டுயானையை பிடித்து உள் வனத்தில் விடுவது குறித்து கருத்து தெரிவிக்க நிபுணர் குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது.
இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறையில் பலரை கொன்ற அரிசி கொம்பன் எனும் ஆண் காட்டுயானை பெருமளவில் பொருட்களை சேதப்படுத்தியது. இதை மயக்க ஊசி செலுத்தி கோடநாடு யானைகள் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர்.
அதற்கு எதிராக யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் கேரளா உயர் நீதி மன்றத்தை அணுகியதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மார்ச் 29 வரை தடை விதித்தது.
அந்த வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது. யானையை பிடிக்க வேண்டிய கட்டாயம், அதன் செயல்பாடுகள், உயிரிழப்புகள் ஆகிய விபரங்களை வனத்துறையினர் தாக்கல் செய்தனர். அதனை ஆராய்ந்த நீதிமன்றம் யானையை பிடித்து பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்க போவதில்லை என்றும், மக்கள் வசிக்கும் பகுதியில் நுழையும் யானையை உள் வனத்தில் விடுவது குறித்து கருத்து தெரிவிக்க நிபுணர் குழுவை அமைத்தது. ரேடியோ காலர் பொருத்த நடவடிக்கை எடுக்கலாம் என வாய்மொழி உத்தரவிட்டது.
நிபுணர் குழு அறிக்கைக்கு பிறகு யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்படும். அதேசமயம் யானையை பிடித்து என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்பியது.
காட்டு யானையால் பாதிக்கப்பட்டுள்ள சின்னக்கானல் 301 காலனியில் வசிப்பவர்களை வேறு பகுதிக்கு மாற்றுவது பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்பதை தெரிவித்த நீதிமன்றம் யானைகள் வசிக்கும் பகுதியில் மலைவாழ் மக்களை எப்படி தங்க வைக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பியது.
கடும் வனத்தில் மக்களை தங்க வைக்கப்பட்டது பிரச்னைக்கு காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியது. யானையை பிடிக்கும் பணிக்கு முகாமிட்டுள்ள வனத்துறை குழு தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
நீதி மன்றம் உத்தரவுக்கு பிறகு சின்னக்கானல், சாந்தாம்பாறையில் எதிர்ப்புகள் வலுத்தன. யானையை பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்கானல் பகுதியில் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் யானையை பிடிக்க தேர்வு செய்த சிமென்ட் பாலம் பகுதியில் 4 கும்கி யானைகள் முகாமிட்டுள்ளன.
அப்பகுதியை பொதுமக்கள் கடக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோதும் பிரச்னைக்கு தீர்வு காணும் வரையில் அங்கிருந்து செல்ல போவதில்லை என நேற்று இரவு வரை முகாமிட்டனர்.
வனவிலங்குகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி பொது மக்கள் சார்பில் இன்று சின்னக்கானல், சாந்தாம்பாறை, சேனாபதி, ராஜாகாடு, ராஜகுமாரி, உடும்பன்சோலை, பைசன்வாலி, மூணாறு, வட்டவடை, தேவிகுளம், இடமலைகுடி, மறையூர், காந்தலுார் ஆகிய 13 ஊராட்சிகளில் இன்று காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பந்த் நடக்கிறது.