News
oi-Jeyalakshmi C
மதுரை: கும்ப ராசியில் அஸ்தமனமாகியிருந்த சனி பகவான் மீண்டும் உதயமாகப்போகிறார். சனிபகவானின் செயல்களின் வேகம் இனி அதிகரிக்கும். கும்ப ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவானின் பயணம் பார்வை படும் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி, சனி அஸ்தமனம், சனி பகவான் உதயம் போன்றவை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சனிபகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியானார்.. ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைந்தார். மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் மீண்டும் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார்.

சனி இருக்கும் இடங்களை விட பார்க்கும் இடத்திற்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று சொல்வார்கள். வரும் மார்ச் 6ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகப்போகும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். சிலருக்கு பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். கும்ப ராசியில் சனியுடன் புதன், சூரியனும் இணைந்து பயணம் செய்யப்போகின்றன.
மேஷம்

சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. மார்ச் மாதத்தில் சனி பகவான் உதயம் நிறைய நன்மைகளை செய்யப்போகிறது. எந்த பிரச்சினைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். உங்களின் தொழில் வளர்ச்சி மளமளவென அதிகரிக்கும். பண வருமானமும் பொருளாதார நிலையும் திருப்திகரமாக இருக்கும். சனிபகவானின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டின் மீதும் 8 ஆம் வீடான அஸ்டம ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. பூர்வீக சொத்து பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் கண்டங்கள் விலகும். பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். பொருளாதார உயர்வும் மன மகிழ்ச்சியும் நிறைந்த காலமாக அமைந்துள்ளது.
ரிஷபம்
கர்ம ஸ்தான அதிபதி கர்ம ஸ்தானம், தொழில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு அதிர்ஷ்டம் வேலை செய்யப்போகிறது. சில நேரங்களில் திருப்தியற்ற நிலை உண்டாகும். இலக்குகளை அடைய நிறைய போராட வேண்டும். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவானால் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் பொறுமை அவசியம். வேலையில் ஏற்படும் தொடர் பிரச்சினைகள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். தொழில் ஸ்தான சனியால் அலுவலகத்தில் பிரச்சினைகளும் உயர் அதிகரிகளுடனான மோதல் போக்கும் அதிகரிக்கும். அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. அதே நேரத்தில் மார்ச் மாதம் முதல் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த வேலையாக இருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வதை தவிர்க்க வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நிதானமாக செய்வது நல்லது. வாகன பயணங்களிலும் நிதானமும் கவனமும் தேவை. பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். நவம்பர் 4ஆம் தேதி முதல் சனிபகவான் நேர்கதியில் பயணம் செய்யும் காலத்தில் உங்களின் சிரமங்கள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
சனி பெயர்ச்சி உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மிகச்சிறந்த தன யோகம் கிடைக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டினை சனி பார்வையிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். பண வருமானம் வந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே.. உங்களுக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். வீடு கட்ட வண்டி வாகனம் வாங்க கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள். ஆறாம் வீட்டு அதிபர் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறது. சனி தரும் சந்தோஷங்களை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே.. சனி பகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்தாலும் சச மகா யோகத்தை தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. சகோதரர்கள் விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. சனிபகவானின் பத்தாம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது.
மகரம்

மகர ராசிக்காரர்கள் பாத சனியாக நீடிக்கிறது. சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் வந்து போகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடியால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். அந்த வேலை கிடைத்த பின்னரே இருக்கும் வேலையை விடுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமும் நிதானமும் தேவை. திருமணம் தொடர்பாக பேச இது ஏற்ற காலம் அல்ல. சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வெண்ணெய் சாற்றினால் சனியால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
கும்பம்

சனி பகவான் ஜென்ம சனியாக பயணம் செய்கிறார். சிலருக்கு மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. காரணம் ஏழாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைக்கிறது. நல்ல வரன் அமையும். திருமணத்திற்காக அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கிக்கொள்ள வேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்தானது. கூட்டுத்தொழில் சிறப்படையும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அபிஷேக அர்ச்சனை செய்து வர நன்மைகள் ஏற்படும்.
மீனம்

மீன ராசிக்காரர்களே..ஏழரை சனி தொடங்கியுள்ளதால் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். பண விரையங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். விரைய செலவுகளை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். யாருக்கும் பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம். கடனாக கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். வேலை விசயத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கினால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
English summary
Sani Peyarchi palan 2023: Lord Shani, who had set in Aquarius, will rise again. The speed of Saturn’s actions will increase from now on. From Aquarius, Saturn’s aspect falls on Aries, Leo and Scorpio. Let’s see what kind of benefits will be given to the people of the zodiac who are aspected by Saturn’s journey.